இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் நல்லதும் கெட்டதும் நம் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையிலே தான் நடக்கிறது. அதே போல தான் இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவத்திற்கான பலனையும் நாம் அனுபவித்தே தீர வேண்டும். இப்படி தெரியாமல் செய்த பாவங்களை தீர்த்துக் கொள்ள பெருமாள் கோவிலுக்கு ஒரு சில பொருட்களை தானமாக தரலாம்.
அந்த வகையில் நம்முடைய பாவங்கள் தீர கோவிலுக்கு தர வேண்டிய தானங்களை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த தானங்களை நாம் தருவதற்கு முன்பு முடிந்த வரையில் நாம் பிறருடைய துன்பத்திற்கு ஆளாகாமல் வாழ்வதே நம்முடைய வாழ்க்கையில் பிறருக்கு நமக்கும் நாம் செய்து கொள்ளக் கூடிய ஒரு நல்ல விஷயமாக கருத வேண்டும்.
பாவம் தீர செய்ய வேண்டிய தானம்
இந்தப் பொருள்களிலே முதன்மையாக நாம் வாங்கி தர வேண்டியது ஆலயங்களுக்கு திருவிளக்குகளை வாங்கித் தரலாம். ஒரு ஆலயத்திற்கு வெளிச்சத்தை வழங்கக் கூடிய இந்த விளக்கு நம்முடைய வாழ்க்கையில் உள்ள இருளையும் நீக்கும். விளக்கு வாங்கிக் கொடுக்க முடியாதவர்கள் விளக்கேற்ற கூடிய எண்ணெய் நெய் போன்றவற்றை வாங்கித் தரலாம்.
அடுத்ததாக பெருமாளுக்கு மஞ்சள் நிறத்திலான வஸ்திரம் வாங்கித் தரலாம். இந்த வஸ்திரம் நீங்கள் வாங்கிக் கொடுக்கும் ஆலயத்தில் உள்ள பெருமாளின் அளவிற்கு ஏற்ப சரியாக வாங்கிக் கொடுக்க வேண்டும். இதனால் நம்முடைய இல்லங்களில் மங்களங்கள் பெருகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்து அரிசியை வாங்கி தர வேண்டும் இது பலரின் பசியை போக்கக் கூடிய ஒன்று. இந்த அரிசியில் செய்த பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் மனதார வாழ்த்தும் போது நம் பாவங்களும் துலையும்.
அடுத்ததாக இந்த பிரசாதங்களை வைத்து கொடுப்பதற்கான வாழையிலை அல்லது பாக்கு மரபட்டை தட்டு, தொன்னை போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். அடுத்து மிக முக்கியமானது சடாரியை வாங்கித் தரலாம். இது பெருமாள் கோவில்களில் நம் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வார்கள் அல்லவா அது தான். இதை வாங்கி தருவதால் புண்ணியங்களை பெறலாம்.
இது மட்டும் இன்றி துளசி தீர்த்தம் வைப்பதற்கான சொம்பு பூஜைக்குத் தேவையான பொருட்களை பெரிய அளவிலோ சின்ன அளவிலோ உங்களுடைய வசதிக்கேற்ப வாங்கிக் கொடுக்கலாம். அது மட்டும் இன்றி வசதி படைத்தவர்கள் பெருமாள் ஆலயங்களுக்கு குடை வாங்கி கொடுக்கலாம். அது உங்களுடைய பல ஜென்ம பாவத்தை தீர்க்கக் கூடியதாக அமையும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்யலாம்.