விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை..நைவேத்தியம்

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை..நைவேத்தியம்

கொழுக்கட்டை படையல்

கற்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, வானில் இன்றும் விண்மீனாய் வலம்வந்து அருள்பவள் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி. புண்ணிய பலன் காரணமாக ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார் விநாயகர். அவர் வருவதை முன்னரே தெரிந்துகொண்ட அருந்ததி, அவருக்காக மோதகம் தயார் செய்தார். பர பிரம்மன் இந்த அண்டமெங்கும் வியாபித்திருக்கிறது என்று தான் அறிந்ததை இவ்வுலகுக்கும் உணர்த்தும் வகையில், வெள்ளை மாவினால் செப்பு செய்து அதனுள் அமிர்தமயமான பூர்ணத்தைப் பொதிந்துவைத்து மோதகம் தயாரித்து, வசிஷ்டரிடம் கொடுத்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்யச் சொன்னாள் அருந்ததி. அப்படி அவள் அளித்த பிரசாதத்தையும், அதன் தத்துவச் சிறப்பையும் உணர்ந்த பிள்ளையார், அதன் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக, மோதகத்தை எப்போதும் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறாராம்.

கொழுக்கட்டை புராண கதை

ஞானபாலி என்பவன் சத்தியமே வடிவான உத்தம அரசன். முழுமுதற் கடவுளான கணபதியின் தீவிர பக்தன். விநாயகரின் பக்தனாக நாட்டை நல்லமுறையில் ஆட்சிசெய்து வந்தபோதும், ஒருமுறை பெரும் பஞ்சம் வந்துவிட்டது. மக்கள் கஷ்டப்பட்டுவிடக் கூடாதே என்று பலவகைத் திட்டங்களைத் தீட்டி, அவர்களைக் காப்பாற்றி வந்தான். எனினும் பஞ்சம் தொடர்ந்து நீடித்ததால், ராஜகுருவின் ஆலோசனைப்படி ருத்ர யாகம் ஒன்றைச் செய்யத் தொடங்கினான். யாகத்தின் நடுவே அரசனின் விதி தனது வேலையைத் தொடங்கியது. ஆம், அந்த வழியே சென்ற மேனகை, ஞானபாலியின் கண்களைக் கவர்ந்தாள். சிற்றின்ப ஆசையால் அரசன் வேள்வியை பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து மேனகையின் பின்னே சென்றான். பின்னே வந்த அரசனை எச்சரித்துவிட்டு மேனகை மறைந்தாள்.

ஒற்றைக்கண் பூதம்

ஏமாந்து போன அரசன் ஞானபாலி மீண்டும் யாகம் செய்யும் இடத்துக்கு வந்தான். யாகம் பாதியில் நின்றதால் பெரும் ஆபத்து நேரும் என்று ராஜ குரு எச்சரித்தார். எனவே, மீண்டும் மற்றொரு நாள் யாகத்தைத் தொடங்கலாம் என்றும் அறிவுறுத்தினார். அதைக் கண்டுகொள்ளாமல் நின்று போன யாகத்தைத் தொடங்கிய ஞானபாலியை அஷ்ட திக் பாலர்கள் தோன்றி சபித்தனர். இதனால் ஒற்றைக் கண் பூதமாக மாறி அலையத் தொடங்கினான் ஞானபாலி. கண்ணில்பட்ட மனிதர்களை எல்லாம் பிடித்து உண்டான் ஞானபாலி. கொடிய அரக்கனாக மாறி சகல உயிரினங்களையும் வதைத்தான். தீராத பெரும்பசியால் உயிர்களை எல்லாம் விழுங்கினான். எனினும், முந்தைய பழக்கத்தின் காரணமாக விநாயகப் பெருமானின் வழிபாட்டை மட்டும் தொடர்ந்தான்.

விநாயகர்

பூமிக்கே பெரும் அச்சுறுத்தலான ஞானபாலியை எந்த தேவர்களாலும் அழிக்க முடியவில்லை. அவனுக்கு கஜமுகனின் ஆசி இருந்ததே காரணம் என்று பூமாதேவி அறிந்துகொண்டாள். தன் மக்களைக் காக்க கணபதியை வேண்டினாள். தன் பக்தனான ஞானபாலிக்கு அருள் செய்யவும் பூவுலகைக் காக்கவும் கணபதி திருவுளம் கொண்டார். வேடனாக உருமாறி, ஞானபாலியை எதிர்க்க வந்தார் கணபதி. காண்பவர் யாவரையும் அழித்துவிடும் பூத ஞானபாலியால், அந்த வேடனை ஒன்றும் செய்ய முடியவில்லை. போர் நீண்டது, இறுதியாக வந்து இருப்பவர் கணபதி என்று கண்டுகொண்டான் ஞானபாலி. கண்ணீரோடு விழுந்து வணங்கி, தன்னை ரட்சித்து ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான்.

கொழுக்கட்டையாக மாறிய அசுரன்

தனது பெரும்பசியை போக்குவதுடன், தன்னையும் கணநாதராகிய பிள்ளையார் தம்மோடு வைத்துக்கொள்ளுமாறு வேண்டினான். பிறப்பிலா பெருவாழ்வைத் தந்து காக்குமாறு அழுதான், கண்ணீரால் தொழுதான். பரம பக்தனான ஞானபாலியைக் கொல்லவோ, பூமியில் அப்படியே விட்டுச் செல்லவோ அந்த மூல முழுமுதற் கடவுளுக்கு மனம் வரவில்லை. கொடுமையான செயல்கள் பல புரிந்ததால், சொர்க்கமும் ஞானபாலிக்குச் சாத்தியமில்லை என்று உணர்ந்தார். எனவே, அவன் வேண்டியபடியே தன்னுடனேயே அவனை வைத்துக்கொள்ள எண்ணினார். அதே சமயம் அவனது பெரும்பசிக்கும் வழி செய்ய திருவுள்ளம் கொண்ட கணபதி கடவுள், விஸ்வரூப வடிவம் எடுத்து, ஞானபாலியைத் தன் கையால் பிடித்து, அவனை ஒரு கொழுக்கட்டை வடிவமாக்கி விழுங்கிவிட்டார். இப்படியாக கணபதிக் கடவுளின் பக்தனான ஞானபாலி, கொழுக்கட்டை வடிவத்தில் விநாயகப் பெருமானின் வயிற்றில் அமர்ந்துகொண்டான். பெறுதற்கரிய இந்தப் பேற்றை பெற்று ஆனந்தம் கொண்டான்.

தேவர்கள் மகிழ்ச்சி தேவர்களும் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். கணநாதரின் ஆணைப்படியே, ஞானபாலியின் பசியைப் போக்க, அவருக்குக் கொழுக்கட்டை படைக்கவும் ஒப்புக்கொண்டார்கள். அன்றிலிருந்து அவருக்குப் படைக்கப்படும் கொழுக்கட்டை யாவும் ஞானபாலிக்கே போய் சேர்ந்தன. நாமும் இன்று வரை ஞானபாலியின் நினைவாக கொழுக்கட்டையைச் செய்து படைத்து வருகிறோம்.

கொழுக்கட்டை தத்துவம் ஆன்மா என்ற இனிப்பான பூரணத்தைப் பொதித்து, இந்த உடலையே ஆண்டவருக்காக அர்ப்பணிக்கிறோம்’ என்பதே கொழுக்கட்டையின் தத்துவம். வாழும் காலம் வரை, தன்னை அப்படியே ஒப்படைக்க முடியாது என்பதால், கொழுக்கட்டையின் வாயிலாகச் செய்கிறோம். ஞானபாலியை வைத்து விநாயகப் பெருமான் நம் ஒவ்வொருவரையும் சரணாகதி அடையச் செய்துவிட்டான் என்பதே இந்தக் கதையின் அடிப்படை. பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ளுங்கள், மனதுக்குப் பிடித்தவாறே வாழ்க்கை அமைந்துவிடும். ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும் என்பது நம்பிக்கை. நம்முடைய வாழ்விலும் மகிழ்ச்சி அதிகரிக்க விநாயகர் சதுர்த்தி நாளில் மோதகம் படைத்து வழிபடுவோம்.

Previous post ஆன்மீகத்தோடு அறிவியலும் இருக்கு புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது
Next post விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *