சென்னையில் கோவிந்தா… கோவிந்தா திருப்பதி திருக்குடை ஊர்வலம்
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். அதில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று 11 வெண் திருக்குடைகள். 250 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாகச் எடுத்துச் செல்லப்படுகிறது.
அதன்படி ஏழுமலையான் கருடசேவைக்கு சென்னையில் இருந்து 11 வெண்பட்டு திருக்குடைகள் இன்று காலை சென்னை பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மக்கள் நலமும், வளமும் பெறவும், விவசாயம் செழிக்கவும், நீர்வளம் பெருகவும் சங்கல்பம் செய்யப்பட்டது.
வருகிற 21-ந்தேதி திருக்குடைகள் திருமலையை சென்று அடைகிறது. அங்கு ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏழுமலையானுக்கு வஸ்திரம், மங்கலப்பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.