செம்பருத்தி பூவின் நன்மைகள்
எங்கள் வீட்டில் செம்பருத்தி பூவைப் பார்த்தால், அதைப் பறித்து, அதன் இதழ்களை அப்படியே மென்று தின்று விடுவோம்.
இது இன்று எங்கள் வீட்டில் பூத்தப் பூ.
என் தம்பி மகள் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, (செம்பருத்தி தேநீர்)அந்த நீரை அருந்துவாள்.
சீயக்காய் அரைக்கும் போது, அதில் செம்பருத்திப் பூக்களை உடன் காயவைத்து அரைப்பது என் வழக்கம்.
தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூக்கள்,, உடன் அரைத்த நெல்லிக்காய் விழுது, வெந்தயப்பொடி, கறிவேப்பிலை விழுது என போட்டு காய்ச்சி, தலைக்குத் தினமும் தடவும் எண்ணெயாக பயன்படுத்துகிறேன்.முடி வளர்ச்சிக்கும், பொடுகு பிரச்சனை தீர்க்கவும், துணை செய்கிறது.
நமக்கு நிறைய நன்மைகளை அள்ளித்தருகிறது செம்பருத்தி.இதன் இலை, பூ, வேர், என அனைத்தும் மருத்துவ குணமுடைய வை.
செம்பருத்தி என்பது பருத்தியில் ஒரு வகை.இது அழிந்து போய், இப்போதுள்ள செம்பரத்தையே ‘செம்பருத்தி’ எனப்படுகிறது.
சித்தர்கள் செம்பருத்தியை தங்கபஸ்பம் என்றழைக்கிறார்கள்.
நன்மைகள்
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது செம்பருத்தி.
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் செம்பருத்தித் தேநீரை அருந்தலாம்.
செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது .சருமத்திற்கு இதமும் சுகமும் அளித்து இரத்தத்தை சுத்தம் செய்து ,உடலை பளபளப்பாக்கும்.
காய வைத்த செம்பருத்தி பூக்களுடன் ,ஆவாரம்பூ ,பாசிப்பயறு, கருவேப்பிலை சேர்த்து பொடியாக்கி சோப்புக்கு பதிலாக தலை முதல் கால் வரை பூசி குளிக்கலாம். இதனால் தோல் நோய்களிலிருந்து விடுபடுவதோடு, சருமம் பொலிவாகவும் இருக்கும்.
செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊறவைத்து குளிக்க, தலை பேன்கள் குறையும்.
பத்து செம்பருத்தி பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி, குடித்து வர சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
செம்பருத்தி பூ உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணி.
செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மில்லி லிட்டர் நீரில் கொதிக்க வைத்து காலை நேரத்தில் அருந்தி வந்தால், இரத்த அழுத்தம் சீராகும்.
செம்பருத்தித் பூத்தூளுடன் சம எடை அளவு மருதம்பட்டை தூள் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வர, இரும்பு சத்து அதிகரித்து, இரத்த சோகை நோய் குறையும்.
உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்ப்புண் ,வயிற்று புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூக்களை மென்று சாப்பிட்டால், புண்கள் ஆறும். ஒரு மாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான மருந்து. எனவே பூவை பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, பாலில் கலந்து காலை ,மாலை இருவேளை குடித்து வர ,இதய பலவீனம் தீரும்.
மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு 10 செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும்.
மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி, வெள்ளை படுதல் போன்றவை குணமாகும்.
கருப்பை நோய்கள் தீரவும் உதவுகிறது.
செம்பருத்தி இதழின் கொதிக்க வைத்து வடிகட்டிய சாறு அருந்தினால், சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை நீக்குவதோடு, நீர் சுருக்கை போக்கி ,சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றுகிறது.
பூவின் சாறை குடிக்கும் போது, இரத்த கெட்ட கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்டிரால் (எச்.டி.எல்) அளவை அதிகரிக்க உதவுகிறது.