திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்

திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்

இத்தலம் தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டது. ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றான தலமாக உள்ளது .கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி, மறுபிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கும்படி இறைவன் அருளிய திருத்தலம் இந்த திருமறைக்காடு.

யாழைப்பழித் தன்னமொழி

மங்கை ஒரு பாகன்

பேழைச்சடை முடியேற்பிறை

வைத்தான் இடம்பேணில்

தாழைப்பொழில் ஊடேசென்று

பூழைதலை நுழைந்த

வாழைக்கனி கூழைக்குரங்கு

உண்ணும் மறைக்காடே

என்று சுந்தரரால் பாடப்பட்ட இந்தத் தலம் புராண காலம் தொடங்கி பல்வேறு நிலைகளில் சிறப்புப் பெற்றது.

சுந்தரர், அப்பர் ,சம்பந்தர் ஆகி யோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி தென்கரைத் தலங்களில் 125 வது சிவத்தலமாக உள்ளது.

இறைவன், இறைவி திருப்பெயர்:

இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அமைத்துள்ளார். திருமறைக்காடர் , வேதாரண்யேசுவரர், மறைக்காட்டு மணாளர் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

இறைவி: வேதநாயகி, யாழைப்பழித்த மொழியாள்.

தலமரம்:

இத்தலத்தின் தலவிருட்சமாக வன்னி மரம் மற்றும் புன்னை மரமாகும்.

தீர்த்தம்

வேத தீர்த்தம் ,மணிகர்ணிகை தீர்த்தம், கடல்துறை , தேவபூஷணம் ஆகியவை இத்தலத்தில் உள்ளன.

வழிபட்டவர்கள்

இக்கோயில் இறைவனை அப்பர் , சுந்தரர், சம்பந்தர், சேரமான் பெருமாள் நாயனார் ,பரணதேவ நாயனார், கபிலதேவ நாயனார், ,பட்டினத்து பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ,சேக்கிழார், வேதங்கள், கௌதமர், அகத்தியர், வசிஷ்டர், விசுமாத்திரர், நாரதர், மாந்தாதா, முசுகுந்த சக்ரவர்த்தி, இராமர், பிரமன், கங்கை, காவிரி ஆகியோர் வழிபட்டனர்.

தலபுராணம்

இந்து சமய வேதங்களான ,சதுர் வேதங்கள் என அழைக்கப்படும் ரிக் , யசூர், சாம, அதர்வண வேதங்கள் நான்கும் மனித உருவம் கொண்டு இத்தலத்தில் இருக்கும் இறைவனை பூசை செய்து வந்தன.

கலியுகம் தொடங்கும் தருவாயில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்ததல்ல என்று எண்ணிய வேதங்கள் அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்து விட்டு சென்றன.

நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை திருநாவுக்கரசர் திறப்பிக்கவும்,

திருஞானசம்பந்தர் திருக்காப்பிடவும் தேவாரம் பாடினர்.

வேதங்கள் வழிபட்டதால் வேதாரண்யம் ,திருமறைக்காடு என்னும் பெயர்கள் ஏற்பட்டது.

சிந்தாமணி விநாயகர்

திருமறைக்காட்டில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் சிந்தாமணி விநாயகர் ஆவார். இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதற்கு காரணம் உள்ளது.

அபிஜித் என்பவனுக்கும் குணவதி என்பவளுக்கும் பிறந்தவனான கணன் எனும் அசுரன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றபோது சிந்தாமணியின் உதவியால் கபிலர் தனக்களித்த விருந்தை கண்டு ஆச்சரியப்பட்டு, கபிலரிடமிருந்து அம்மணியை பறித்துக் கொண்டு வந்து விட ,கபிலர் விநாயகரை நோக்கி யாகம் புரிந்து, அம்மணியை மீட்டுத் தரவேண்டினார்.

சித்தி ,புத்தி தேவிகளுடன் சிங்க வாகனத்தில் தோன்றிய விநாயகர் தனது திருக்கை பாசத்தினால் கணனின் சிரசை அறுத்து, சிந்தாமணியை கபிலரிடம் ஒப்படைத்தார். இதனாலேயே இவருக்கு சிந்தாமணி விநாயகர் என்னும் பெயர் ஏற்பட்டது.

சிறப்புகள்

வேதங்கள் வழிபட்டதால் இப்பெயர் பெற்றது.

அகத்தியருக்கு திருமணக் காட்சி நல்கிய திருத்தலம்.

வேதங்களால் அடைபட்ட கதவை, திருநாவுக்கரசர், பண்ணினேர் மொழி என்று மொத்தம் 10
திருப்பாசுரம் பாடி திறக்கச் செய்தார்.

திறந்த கதவை மூடவும் , திறக்கவும் பதிகம் பாடுமாறு கூறிய அப்பரின் வேண்டுக்கோளுகிணங்க, சதுரம் மறை என்று ஒரே ஒரு திருப்பதிகம் சம்பந்தரால் பாடப்பட்டவுடன் கதவு மூடிக் கொண்டது.

இராமர், இராவணனை கொன்ற பழி நீங்கப் பூசித்தத் தலமாதலால், இஃது கோடிக்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

கோவிலில் எரியும் விளக்கிலிருந்து நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, மறுபிறப்பில் மாவலி சக்கரவர்த்தியாக பிறந்தது. இச்செய்தியை அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் எட்டாம் திருப்பாட்டில் (நான்காம் திருமுறை -“ஆதியில் பிரம்மனார் தாம் “என்று தொடங்கும் பதிகம்)குறிப்பிட்டுள்ளார்.
முசுகண்ட சக்கரவர்த்தியார் தியாகேசப் பெருமானை எழுந்தருளுவித்த ஏழு விடங்கத் தலங்களில் ஒன்று .(தியாகர்- புவனவிடங்கர், நடனம்- ஹம்ச நடனம் ,மேனி- மரகதத் திருமேனி; ஆசனம் -இரத்தின சிம்மாசனம்)

ஏழு விடங்கத் தலங்கள்:

விடங்கக் கோயில்களில் தியாகராஜர் என்று ஒரு மூர்த்தி இருப்பார் .இது சிவபெருமானின் சஹா உமா ஸ்கந்த (பொதுவாக சூமாஸ்கந்தா என்று அழைக்கப்படுகிறது) வடிவமாகும்.

ஆரம்பத்தில் இந்த மூர்த்தியை மகாவிஷ்ணு வேண்டிக்கொண்டார். அவருக்கு அழகான மன்மத மகன் பிறந்தான். பின்னர் பிரம்மாவிடம் கொடுத்தார். அவர் அதை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் மூர்த்தியை நீண்ட நேரம் வேண்டிக் கொண்டான்.

குரங்கு முகம் கொண்ட சோழ மன்னன் முசுகுந்தன் வீரத்திற்கு பெயர் பெற்ற அரசன். ஒருமுறை அசுரர்களை வெல்ல இந்திரனுக்கு உதவினான். இந்திரன் எதையாவது வழங்க விரும்பி முசுகுந்தனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். முசுகுந்தன் சிவ பக்தன் மற்றும் தியாகராஜரால் ஈர்க்கப்பட்ட அந்த மூர்த்தியை கேட்டார்.அதை முச்சுகுந்தனிடம் கொடுக்க இந்திரன் விரும்பவில்லை. அதனால் ஆறு மூர்த்திகளை உண்டாக்கும் படி கட்டளை இட்டு , முசுகுந்தனை தனக்குத் தேவையானதை கண்டுபிடிக்க சொன்னார் . முசுகுந்தன் கடவுளை வேண்டிக்கொண்டு அசல் மூர்த்தியைக் கண்டுபிடித்தான். எனவே இந்திரன் ஏழுமூர்த்திகளையும் முசுகுந்தனிடம் கொடுத்தார். முசுகுந்தன் அந்த மூர்த்திகளை ஏழு விடங்கக் கோயில்கள் என்று அழைக்கப்படும் ஏழு கோயில்களில் வைத்திருந்தான். இந்த கோயில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளன. மற்றும் தஞ்சாவூரைச் சுற்றி அமைந்துள்ளன.

திருவாரூர் – விதி வித்தியாசார்-அஜப நாதனம்.
நாகைக் காரோணம் – சுந்தர விடங்கர் – விசி நடனம்.
திருக் கொல்லி- ஆவணி விடங்கர் – ப்ருங்க நடனம்.
திரு நள்ளாறு – நகர விடங்கர் – உன்மத்த நடனம்
திருக் காரயில் – ஆதி விடங்கர் – குக்குட நடனம்
திரு வைமூர்- நிலா விடங்கர் – கமலநாதன்
திரு மறைக்காடு- புவனவிடங்கர் – ஹம்சபதா நடனம்.
திருவிளையாடல் புராணம் அருளிய பரஞ்சோதி முனிவர் அவதாரத் தலம்.
பரஞ்சோதி முனிவரே கோவில் தல புராணத்தை அருளிச் செய்துள்ளார்.

இங்குள்ள மரகதலிங்கம் முசுகுந்த சக்கரவர்த்தியால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்தக் கோயில் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு பதிவுகளோடு காணப்படுகிறது. கோயிலின் நிர்வாகத்தில் குறிப்பிட்ட காலத்தில் இலங்கை வரணி ஆதீனத்தின் பங்களிப்பு இருந்துள்ளது.
தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு இந்திரன் அளித்து, முச்சுகுந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

இந்தக் கோயிலின் கருவறையில் பரமசிவன்- பார்வதி இருவரும் திருமண கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப்பெற்ற கோவிலாகவும் இது திகழ்கிறது.

வன்னி மரம். நாகதோஷம், திருமணத் தடைக்கு பரிகாரம் செய்யும் இடம்.

குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள வன்னி மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணம் வரம் வேண்டுவோர் ,சுவாமிக்கு கல்யாண மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

தலவிருட்சம் புன்னை மரம்

தலவிருட்சமாக வன்னி ,புன்னை மரங்கள் திகழ்கின்றன. இவற்றில் வன்னி மரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்களுடையதாகவும், இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம்.
கோயிலின் அம்பாள் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் எனவும் ,வடமொழியில் வீணா வாத விதூஷணி எனவும் அழைக்கப்படுகிறார்.

வீணையில்லா சரஸ்வதி

அம்பிகையின் குரல் சரஸ்வதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் யாழைப் பழித்த மொழியாள் என்ற பெயர் வந்ததாகவும், இதன் காரணமாக இங்கு உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் தவக்கோலத்தில் சுவடியை கையில் கொண்டு இருப்பதையும் காணமுடிகிறது.

யாழைப் பழித்த மொழியம்மைச் சன்னதி

புகழ்பெற்ற கோளாறு பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கே தான் பாடி அருளினார்.
தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.
தலத்தில் உள்ள முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடம் பெற்றவர்.

தெற்கு பார்த்த துர்கை

இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கி உள்ளாள். திரிபங்கி வடிவில், நின்ற கோலத்தில் மு றுவல் காட்டி எழுந்தருளியுள்ள இக்காவல் தெய்வம் இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வமாகும்.

விசுவாமித்திர முனிவர் பிரம்ம ரிஷி ஆக வேண்டும் என்ற தனது ஆவலை ,சிவபெருமானை இத்தலத்தில் பூசித்து நிறைவேற்றிக் கொண்டார்.
இத்தலத்தில் மேற்கு கோபுர வாயிலில் உள்ள விநாயகர், இராமர் இராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால், இத்தலத்தில் உள்ள விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலை தூக்கிய நிலையில் காட்சி தருகிறார்.

முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்னேஸ்வர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன .மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகப்படுத்தப்படுகிறது.
இக் கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து,காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.
மணிகர்ணிகைத் திட்டத்தில் நீராடி திருமண கோலத்தில் காணும் இறைவியை வழிபட்டால் திருமண தடைத் விலகும் . குழந்தைப்பேறு, கல்வியில் சிறந்த ஞானம், செல்வச் செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும் என்பதில் நம்பிக்கை.

அம்பாளுடன் சந்திரசேகர சுவாமிகள்

இத்தலத்திற்கு நேர் எதிரே கிழக்கே உள்ள கடல் ஆதிசேது என்னும் கடல் தீர்த்தம் .
கோடியக்கரையிலுள்ள ஆடி சேது என்னும் இந்த கடல் திர்த்தத்தில் ஒருமுறை நீராடுவது, சேதுவில் நூறு தடவை நீராடுவதற்கு சமம்.

இந்த தீர்த்தங்களில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை, மஹாளய அமாவாசை நாள்களில் ஆதிசேது முழுக்குத் துறையிலும், வேதாரண்யேஸ்வரர் கோவில் சன்னதிக் கடலிலும் புனித நீராடுவது நல்லதென நம்பப்படுகிறது.

இக்கோயில் வளாகத்திற்கு வெளியில் உள்ள அத்தனை இடங்களிலும் உப்புகரிக்கும் தண்ணீரே இருக்கும். இத்தலத்தில் மட்டுமே நல்ல தண்ணீர் உள்ளது. இவ்வூருக்கு குடி தண்ணீர் இந்த கோயில் வளாகத்தில் இருந்து தான் எடுத்து பயன்படுத்தப்படுகிறது.
தியாகராஜர்

இத்தலம் சப்த விடத் தலங்களில் ஒன்று. முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரன் அளித்த தியாகமூர்த்தங்களுள் ஒன்று. இவர் செய்யும் நடனம் அம்ச நடனம் எனப்படும்.

63 நாயன்மார்களோடு சேர்ந்து தொகையாக்கள் 10 பேர் ,ஆக மொத்தம் 73 பேருக்கும் இங்கு சிலைகள் உள்ளன. இங்கு 73 பேரும் நாயன்மார்களாகவே அழைக்கப்படுகின்றனர்.

வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் எழுந்தருளிய சந்திர சேகர சுவாமி.🙏

நவகிரகங்கள்

கோயிலில் தனித்தனி விக்கிரகமாக அமைந்த நவகிரகங்கள் யாவும் இறைவனின் திருமண கோலத்தைக் காண ஏதுவாக ஒரே திசையில் அமைந்துள்ளன.

குழந்தை பேறு பெறவும், கடன் தொல்லை நீங்கவும் இங்கு உள்ள காலபைரவரை நெய் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

திருவிழாக்கள்

கோவிலில் ஒரு மாத காலம் நடைபெறும் மாசி மகத் திருவிழா சிறப்புப் பெற்றது. மாசிமக நாளில் சுவாமி, சன்னதிக் கடலுக்குத் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் விழா நடைபெறும். 73 மூவர் சுவாமி புறப்பாடும் கைலாச வாகனத்தில் வீதிவுலாவும் சிறப்பானது.

அம்மனுக்குப் பத்து நாள் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவும் பெரிய அளவில் நடைபெறும்.

வேதங்கள் நான்கும் வழிபட்டு மூடிச் சென்ற கோவிலின் பிரதான கதவினை சமயக் குரவர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடி திறந்ததும் சிறப்புக்குரியது.

தமிழ் மொழியின் வலிமையைப் பறைசாற்றும் இந்த நிகழ்வு, திருக்கதவு திறக்கும் ஐதீகத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

தேரோட்டத்துக்குச் சிறப்புப் பெற்ற தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் ஓடிய 5 மரத்தேர்களும் பழுதாகிச் சிதைந்து போனதால், 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேரோட்டம் தடைப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழக அரசு அளித்த நிதியுடன், கோயில் உபயதாரர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் புதிய மரத்தேர் செய்யப்பட்டு, கடந்த 2017 ஆண்டு மாசிமகப் பெருவிழாவின்போது மீண்டும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு சுவாமி, அம்பாள், விநாயகர் மூவருக்கும் தனித்தனி கொடிமரங்கள் உண்டு.

வேதாரண்யத்திற்கு செல்ல:

வேதாரண்யத்துக்கு, நாகை (வேளாங்கண்ணி) ,திருவாரூர், திருத்துறைப்பூண்டி ,பட்டுக்கோட்டை பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன .

இரயிலில் வருவோர் திருவாரூர் மற்றும் நாகை அல்லது வேளாங்கண்ணியில் இறங்கி அங்கிருந்து சாலை வழியாக பயணித்து வேதாரண்யம் அடையலாம் .

வெளிநாடுகளில் இருந்து வருவோர் திருச்சி விமான நிலையத்தை அடைந்து ,அங்கிருந்து சாலை வழியாக தஞ்சை ,திருத்துறைப்பூண்டி வழியாகவும், திருவாரூர் ,நாகை வழியாகவும் வேதாரண்யத்தை வந்தடையலாம்.

வேதாரண்யத்தில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. அருகே உள்ள வேளாங்கண்ணியில் அதிக எண்ணிக்கையில் தங்கும் விடுதிகள் உள்ளது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில் ,வேதாரண்யம், திருமறைக்காடு- 614 810. நாகப்பட்டினம் மாவட்டம்.

Previous post ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: வைரலாகும் இன்ஸ்டா பதிவு
Next post திருஅருள் வேண்டும் வரலட்சுமி விரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *