ஒரு அழகான அடர்ந்த காடு. அந்த காட்டில் சிங்கம் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தது. இருவரும் தினமும் வேட்டைக்கு சென்று உணவுகளை வேட்டையாடி சாப்பிட்டு வந்தனர். சிங்கத்தின் மனைவி கர்ப்பமானதால் அது வேட்டைக்கு செல்லாமல் ஓய்வு எடுத்து வந்தது. சிங்கத்திற்கு அழகான குட்டி ஆண் சிங்கம் பிறந்தது. குட்டியை பார்த்து கொள்ள வேண்டும் என்பதால் சில நாட்களுக்கு மட்டும் ஓய்வு எடுத்து கொண்டது பெண் சிங்கம். அந்த சமயத்தில் தனது குட்டியுடன் விளையாடி நேரத்தை போக்கியது பெண் சிங்கம்.
சில நாட்கள் கழிந்ததும் ஆண் சிங்கத்துடன் வேட்டைக்கு கிளம்பியது பெண் சிங்கம். குட்டி சிங்கத்தை தனியாக விட்டு செல்வது பாதுகாப்பானது அல்ல என்பதால் கொஞ்ச காலத்திற்கு ஆண் சிங்கம் தனியாகவே வேட்டையாட முடிவு செய்தது. இந்த முடிவை பெண் சிங்கம் ஒத்துக்கொள்ளவில்லை. தனியாக எப்படி உங்களால் சமாளிக்க முடியும், குட்டியையும் நாம் வேட்டைக்கு எடுத்து செல்லலாம் என்றது. வேட்டையாடும் போது குட்டி சிங்கத்திற்கு ஏதாவது ஆபத்து நேரிடலாம் என எடுத்து கூறியது ஆண் சிங்கம். பெண் சிங்கம் வழியில்லாமல் ஒத்துக்கொண்டது . தினமும் ஆண் சிங்கம் தனியாக வேட்டைக்கு சென்று தனது இருப்பிடத்திற்கு ஏதாவது உணவாக கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தது.
அன்று அதற்கு எங்கு தேடியும் உணவு எதுவும் கிடைக்கவில்லை. காட்டின் ஒரு பகுதி முழுவதும் தேடி அலைந்தது. நேரமும் இருட்ட தொடங்கியது. சரி வேறு வழியில்லை என்று இருப்பிடத்திற்கு திரும்பியது ஆண் சிங்கம். திரும்பும் வழியில் ஒரு குட்டி நரியை கண்டது. அது மட்டும் தனியாக இருந்தது. அதை எடுத்து தோள்களில் போட்டு கொண்டு இருப்பிடத்திற்கு விரைந்தது.
தனது மனைவியிடம் இன்று இதுதான் கிடைத்தது என்று குட்டி நரியை காண்பித்தது. அதிர்ச்சியான பெண் சிங்கம், எப்போதும் வேட்டையாடி தானே கொண்டு வருவீர்கள், உங்களால் இதை கொல்ல முடியாது என்றால் ஒரு தாயான என்னால் எப்படி முடியும் என்று கலங்கியது. இவனும் என் மகனை போல தானே, என்றது பெண் சிங்கம். சரி என்ன செய்யலாம் நீயே சொல் என்றது ஆண் சிங்கம். நான் பார்த்து கொள்கிறேன் என அந்த குட்டி நரியை வளர்க்க ஆரம்பித்தது.
சிங்க குட்டிக்கும் அது நரிக்குட்டி என்று தெரியாது. தன் சகோதரனாக இருக்கும் என நினைத்து கொண்டு அதனுடன் கொஞ்சியது. இரண்டும் ஒன்றாக விளையாட ஆரம்பித்தன. அருகில் உள்ள இடங்களுக்கு ஒன்றாக சென்று குட்டி பறவைகளை வேட்டையாடி பழகி வந்தன. இரண்டும் இப்போது ஓரளவு வளர்ந்துவிட்டன. ஒருநாள் குட்டி சிங்கம் தன் தாயிடம் இவன் மட்டும் நம் மூன்று பேர் போல அல்லாமல் வித்தியாசமாக இருக்கிறான் என்றது. இதை கேட்டதும் குட்டி சிங்கத்தை சமாளித்து அனுப்பியது. இந்நிலையில் பெண் சிங்கத்திற்கு ஒரு யோசனை வந்தது.
நரிக்குட்டியை அழைத்தது பெண் சிங்கம். உன்னிடம் சில விஷயங்கள் கூற வேண்டும் என்றது. நரியும் சொல்லுங்க அம்மா என்றது. பெண் சிங்கமோ நடந்தவற்றை அதனிடம் எடுத்து சொன்னது. உன் சகோதரனுக்கு நீ யார் என்ற உண்மை இதுவரை தெரியவில்லை, அவனை போலத்தான் உன்னையும் பார்க்கிறான். இருந்தாலும் விரைவில் நீ அவனை போல சிங்கம் இல்லை தான் வேட்டையாடும் உணவுகளை போல நீயும் ஒருவன் என தெரிய வரும். அன்று உனது உயிருக்கு ஆபத்து. உன்னையும் என் குழந்தையாக வளர்த்துவிட்டேன், ஆகையால் இப்போதே உன் கூட்டத்தை தேடி கண்டுபிடி, அவர்களுடன் உன் வாழ்க்கையை சந்தோசமாக தொடங்கு என்றது பெண் சிங்கம்.
நரிக்கு இந்த அதிர்ச்சியை ஏற்று கொள்ள முடியவில்லை. ஆனாலும் உயிர் முக்கியம் இல்லையா, பெண் சிங்கத்திடம் என்னை நீங்கள் கொல்லாமல் இவ்வளவு இரக்கம் காட்டியுள்ளீர்கள். அதற்காக நான் கடமைப்பட்டிருக்கிறேன், நன்றி என்று கூறிவிட்டு தன் கூட்டத்திடம் போய் சேர்ந்தது. நரியும் அதன் கூட்டத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தது. சிங்கமும் சந்தோசமாக இந்த வாழ்க்கையை தொடர்ந்தது.